பதிமூன்று முறை படையெடுப்பு நடத்தியும், தங்கள் கொடியை நட முடியாத ஐபிஎல் கோட்டையை, இம்முறை முற்றுகையிடும் முனைப்போடு களமிறங்குகிறது டெல்லி.
2018-ம் ஆண்டு, புள்ளிப் பட்டியலின் பாதாளத்தைப் பார்த்த டெல்லி கேபிடல்ஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இறுதிப் போட்டிக்கு முன்னேறி, மும்பையுடன் மோதுமளவு அபார வளர்ச்சி அடைந்துவிட்டது. எனினும், தங்களது முதல் சாம்பியன்ஷிப் மகுடத்தை அவர்கள் ஏன் கடந்தாண்டு தூக்க முடியாமல் போனது, இந்த வருடம் அந்த வாய்ப்பு டெல்லிக்கு வாய்க்குமா?!
பலவீனம் - 1 : ஓப்பனிங் ஓட்டை உடைசல்கள்!
கடந்த சீசனில், டெல்லியின் ஓப்பனிங்கில், ஓப்பனர்கள் இருவரில், யாரேனும் ஒருவர்தான் நன்றாக விளையாட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு ஆடியதைப் போல் விளையாடினார்கள். தவான் மட்டுமே நிரந்தர ஓப்பனராக இருக்க, மறுமுனையில் பிரித்வி ஷா, ரஹானே, ஸ்டாய்னிஸ் என மாறிக் கொண்டே இருந்தார்கள். முதல் விக்கெட்டை இழப்பதற்குள், டெல்லி எடுத்திருந்த ரன்களின் சராசரி வெறும் 22 மட்டுமே. அதிலும், 17 போட்டிகளில் விளையாடியதில், 10 போட்டிகளில், இரட்டை இலக்கத்தைப் பார்ட்னர்னர்ஷிப் எட்டும் முன்னதாகவே, இருவரில் ஒருவர் நடையைக் கட்டி இருந்தனர். இந்த எண், மும்பையின் பக்கம் 36 ஆக இருந்தது. இதுதான், மும்பையை டெல்லியை விட மேலே கொண்டு போய் வைத்தது. இவர்கள் இருவரும் மோதிக் கொண்ட இறுதிப் போட்டியில் கூட, முதல் விக்கெட்டை, மும்பை, 45 ரன்கள் சேர்த்தப் பிறகு இழக்க, டெல்லியோ, ரன் எதுவும் எடுக்காமலேயே இழந்திருந்தது.
பலவீனம் - 2 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்!
வலிமையான பௌலிங் யூனிட்டைக் கொண்டதாக சென்ற தொடரில் டெல்லி இருந்தாலும், அவ்வெற்றியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு, எதுவுமே இல்லை. ரபடா, நார்க்கியா உள்ளிட்ட வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள், சராசரியாக 8.94 எக்கானமியோடு, 75 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். ஆனால், மோகித் ஷர்மா, அவிஷ் கான், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், 10.12 என எகிறிக்குதித்த எக்கானமியோடு வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. காயத்தின் காரணமாக, இஷாந்த் ஷர்மா இல்லாமல் போனதால் இந்திய வேகப்பந்து வீச்சு என்பது சொல்லிக் கொள்ளும்படியானதாக இல்லாமல் போனது.
பலவீனம் : 3 வேகம் Vs ஸ்பின்!
சுழலுக்கு ஒத்துழைக்கும் அரபு மண்ணில், டெல்லி சுழல்பந்து வீச்சாளர்களால், சிறந்த பங்காற்ற முடியவில்லை. காயம் காரணமாக, அமித் மிஷ்ரா 3 போட்டிகளில் மட்டுமே ஆடி, 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அதன்பின் சுழல்பந்து வீச்சு அஷ்வின் மற்றும் அக்ஸர் பட்டேலை மட்டுமே சார்ந்திருந்தது. அஷ்வினும், அக்ஸரும் தலா 15 போட்டிகளில் விளையாடி முறையே, 13 மற்றும் 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தனர். ஆக மொத்தம், வேகப்பந்து வீச்சாளர்கள், 82 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க, சுழல் படை 25 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள், சிறப்பான பணியை ஆற்றி விட்டதால், சுழல்பந்துவீச்சில் இருந்த குறைபாடு, வெளிப்படையாய் தெரியவில்லை. ஆனால், போன தொடரிலிருந்து, கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
பலவீனம் - 4 : திட்டமிடல் இல்லையோ?!
கடந்த தொடரில், டெல்லி கேபிடல்ஸ் மும்பையுடன், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, மூன்று முறை மோதி, மூன்றிலும் தோற்றிருந்தது. 5 மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்றவர்கள், ப்ளே ஆஃபில், 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விமுகம் கண்டனர். மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக ஆடினார்கள் என்பது உண்மைதான் எனிலும், அவர்கள் வீழ்த்தவே முடியாத அணி என்பதில் உண்மை இல்லை. மேலும், பெரும்பாலும், மும்பை இந்தியன்ஸ், அதே ப்ளேயிங் லெவனோடுதான், தொடர் முழுக்கும் பயணிப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், மும்பைக்கு எதிரான ஒரு சிறப்பு வியூகத்தை ஏன் டெல்லி வகுக்கவே இல்லை. சரி முதல் இரண்டு போட்டியில், தோல்வியைச் சந்தித்திருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளிலாவது, அதைச் சரிசெய்ய அவர்கள் முயன்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறியதுதான், அவர்களது கோப்பைக் கனவை மங்கச் செய்தது.
சென்ற ஆண்டு கேலிகளைச் சுமந்து சென்ற பிரித்வி, இந்தாண்டு விஜய் ஹசாரே தொடர் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே சீசனில், 800 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் திரும்பி இருக்கிறார். இது அணியின் பலத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மேலும் நடந்து முடிந்த, இந்திய இங்கிலாந்து தொடரில், சிறப்பாக செயலாற்றிய தவானும் நல்ல ஃபார்மில் உள்ளதால், இவர்கள் இருவரும் இணைந்து மிக வலிமையான அடித்தளத்தை அமைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஷ்ரேயாஸ் மிஸ்ஸிங்!
போனமுறை காயங்களால், பௌலிங் யூனிட் பாதிக்கப்பட்டதென்றால், இம்முறை, கேப்டன் ஷ்ரேயாஸே காயத்தால் பாதிக்கப்பட்டு, தொடரைவிட்டு வெளியேறி இருப்பதுதான், மிகப்பெரிய பின்னடைவு. ஒருபக்கம் மூன்று வருடங்களாக கேப்டனாக இருந்த ஒருவர் இல்லாமல் போனது அணிக்கு இழப்பு என்றால், சென்ற சீசனில் 519 ரன்கள் குவித்து, பல சந்தர்ப்பங்களில் அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றவர் இல்லாமல் போனது அணிக்குப் பேரிழப்பே. இவருக்கான மாற்றுவீரர் யார் என்பதே இப்போது டெல்லிக்கான சவால். ஏனெனில், அவருடைய இடத்தை நிரப்பக் கூடிய ஒரு இந்திய வீரர் கிடைப்பது எளிதில்லை. வேறு வழியின்றி ரஹானே மட்டுமே அவர்களது தேர்வாக இருக்கும் பட்சத்தில், அவரது கடந்த ஆண்டு செயல்முறை அந்த அளவு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்தவருடம், எப்படி ரஹானேவின் ஆட்டம் இருக்கும் என்பதைப் பொறுத்தே, அணியின் வெற்றி தோல்விகள் அமையும்.
டிஃபெண்டிங் கில்லாடிகள்!
சென்ற முறை டெல்லி, லீக் சுற்றுகளில், முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில், பெரும்பாலும் வெற்றியே பெற்றது. ஒன்பது போட்டிகளில், இலக்கை நிர்ணயித்து, அதில், ஆறுமுறை வென்றும் காட்டியது. எவ்வளவு குறைவான ஸ்கோராக இருந்தாலும், அதை டிஃபெண்ட் செய்துவிடும் என்ற நம்பிக்கையோடு களமிறங்கியது டெல்லி.
பவர்ஃபுல் பேட்டிங் லைன்அப்!
ஷ்ரேயாஸ் இடத்தில் யார் என்பது மட்டும்தான் கேள்வியே ஒழிய, அவர் இல்லாததனால்கூட பேட்டிங் லைன்அப் பலவீனமடையவில்லை. ஸ்டாய்னிஸ், தவான், பிரித்வி ஷா, சாம் பில்லிங்ஸ், ஹெட்மையர், பன்ட் என மிகப்பெரிய ரன் மெஷின்களே டெல்லியின் கைவசம் உள்ளன. இது அசாத்தியமான ரன்களை சேஸ் செய்யவும், கடினமான இலக்குகளை எதிரணிக்கு நிர்ணயம் செய்யவும் அவர்களுக்குப் பேருதவி செய்யும்.
இஷாந்த் பேக்அப் உமேஷ்!
கடந்த முறை, காயத்தால் இஷாந்த் ஷர்மா, தொடர் முழுவதும் விளையாட முடியாமல் போனதை மனதில் நிறுத்தி, அவருக்கு பேக் அப்பாக, ஆர்சிபி வெளியேற்றிய உமேஷை ஏலத்தில் எடுத்துள்ளது டெல்லி.
நாக்அவுட் போட்டிகள்!
2019-ம் ஆண்டு, சிஎஸ்கேக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியிலும் சரி, போன வருடம் மும்பைக்கு எதிரான, ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியிலும் சரி, டெல்லியின் செயல்பாடு மிகச் சிறப்பானதாக இல்லை. முக்கியமாக, இறுதிப் போட்டியில், மும்பைக்கு கடுமையான போட்டியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகச் சுலபமாகத் தோற்கடிக்கப்பட்டது டெல்லி. நாக் அவுட் போட்டிகளில், இன்னும் கொஞ்சம் கூடுதல் வியூகங்களோடும், உத்வேகத்தோடும் அவர்கள் களமிறங்க வேண்டுமென்பதே முதல் தேவை.
கேப்டனாக பன்ட்!
ஷ்ரேயாஸ் இல்லாத நிலையில், அஷ்வின் கேப்டன் ஆவார் என ஆருடங்கள் கணிக்கப்பட்ட நிலையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி, பன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது ஒருவகை ஆச்சர்யத்தை அளித்தாலும், அவரது சமீபத்திய ஃபார்ம், அவரது துடிதுடிப்பு, உத்வேகம் எல்லாமும் அணியின் வெற்றிக்கான உள்ளீடாக இருக்கும் எனக் கருதியே, அவருக்கு கேப்டன் பதவியைக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறது டெல்லி நிர்வாகம். 23 வயதே ஆன பன்ட், இந்தச் சுமையை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் ஆட்கொண்டுள்ளது.
அதிலும் முதல் போட்டியில், சிஎஸ்கேவுடன் மோதுகிறது டெல்லி. அனுபவம் நிறைந்த தோனியின் தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கேவை வீழ்த்த, எப்படி தனது அணியை பன்ட் வழிநடத்த இருக்கிறார் என்பது, தொடரில் அவரது ஒட்டுமொத்த கேப்டன்ஷிப்புக்குமான முன்னோட்டமாக இருக்கும். இதுமட்டுமன்றி, தனது டெஸ்ட் ரன் கணக்கையே, சிக்ஸரோடு தொடங்கிய பன்ட், கேப்டனாகவும் அவதாரமெடுத்துள்ள பல சம்பவங்களை இந்த வருடம் செய்வார் என எதிர்பார்க்கலாம்.
ஷ்ரேயாஸின் சீரிய கேப்டன்ஷிப்பில், சென்ற முறை இறுதிப் போட்டியை எட்டிய டெல்லியை, இம்முறை, பயமறியா பன்ட், கோப்பையை முத்தமிட வைப்பார் என நம்பலாம். பன்ட்டின் ஸ்பெஷல் பர்ஃபாமென்ஸுகளுக்காக காத்திருப்போம்!
from விகடன் https://ift.tt/3s1hNYC
via IFTTT
0 Comments
Thanks for reading