உலகில் எத்தனையோ தீமைகள் இப்போது அதிகரித்துள்ளன. லஞ்சம், ஊழல், பாலியல் வன்முறை என இன்று நம்மை வந்துசேரும் செய்திகள் பல நம் மனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
ஆனால் இதே உலகில் இன்றைய கால கட்டத்திலேயே பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அவை அதிகம் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை.
அவற்றைப் பற்றிப் பலர் அறிவதில்லை.
அத்தகைய செயல்களைச் செய்யும் நல்லவர்களால்தான் இன்றும் மழை பெய்கிறது! *`நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!`* என்பதல்லவா தமிழ் மூதாட்டி அவ்வையின் திடமான தீர்மானம்!
*நிகழ்வு 1:*
நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போக வேண்டும். ஆட்டோ பிடித்தார்.
நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230.
பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார்.
`நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர்.
அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார்.
ஆட்டோ ஓட்டுநர் அவரின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.
காலை பத்தரை மணி இருக்கும். நண்பரின் செல்பேசியில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
குறுஞ்செய்தி அனுப்பியவர் அந்த ஆட்டோ ஓட்டுநர்தான். குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருந்த தகவல் என்ன தெரியுமா?
`உங்களுக்கு நான் தரவேண்டிய மீதித்தொகை ரூ270 க்கு உங்கள் செல்போனில் ரீசார்ஜ் செய்துவிட்டேன்! நன்றி.`
மிகுந்த வியப்படைந்த நண்பர் தன் செல்போனையே தன் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
_(ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டருக்கு மேல் பணம் கேட்பதையே முன்னிலைப் படுத்திச் சொல்கிறோம். அவர்களிடையே இப்படிப் பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் சொல்வதில்லை)_
*நிகழ்வு 2:*
இன்னொரு நண்பர் குடும்பத்தோடு காரில் பெங்களூர் புறப்பட்டார். வழியில் சாப்பிடுவதற்கு உரிய சாப்பாட்டை டிபன் கேரியரில் எடுத்துக் கொண்டார்.
சாப்பாட்டு நேரம் வந்தபோது காரை நிறுத்தி எங்காவது அமர்ந்து சாப்பிட முடிவு செய்தார்கள். ஒரு வயல்வெளியும் ஒரு கிணறும் அதன் அருகில் ஓர் ஆலமரமும் தென்பட்டன. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட எண்ணிய குடும்பத்தினர் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிபன் கேரியரோடு மரத்தடிக்குச் சென்றார்கள்.
மரத்தடியில் ஏற்கெனவே அந்த வயலுக்குச் சொந்தக்காரரான ஒரு விவசாயி தன் சாப்பாட்டைச் சாப்பிட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கீழே ஒரு தட்டு. பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர். மற்றும் உணவுப் பொட்டலம்.
இவர்களை அன்போடு வரவேற்ற விவசாயி, இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் என்று கூறி அருகேயிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்து அவர்களுக்கு உதவினார்.
குடும்பமும் சாப்பிட்டு முடித்தது. அந்த விவசாயியும் தன் உணவை உண்டு முடித்தார். நண்பர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். அந்த விவசாயி தான் பருகுவதற்குத் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தினாரே அன்றி அந்தக் கிணற்று நீரை பயன்படுத்தவில்லை. நண்பருக்கு வியப்பு. விவசாயியிடம் கேட்டார்:
`கிணற்று நீர் உப்புக் கரிக்காமல் நன்றாகத் தானே இருக்கிறது? கிணறும் உங்களுடையது தானே? அப்படியிருக்க நீங்கள் ஏன் கிணற்று நீரைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்?`
தன் மேல் துண்டால் கையைத் துடைத்து கொண்டே கள்ளங்கபடமில்லாமல் சிரித்தவாறு விவசாயி சொன்ன பதில் இது:
`ஐயா! இந்தக் கிணறு என்னுடையதுதான். இதை வெட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினேன். அந்தக் கடன் இன்னும் தீரவில்லை. அது தீரும்வரை வயலில் பாய்ச்சுவதற்கு மட்டுமே கிணற்று நீரைப் பயன்படுத்துவது என்றும், வயல் பயன்பாட்டுக்குத் தவிர சொந்தப் பயன்பாட்டுக்கு இந்த நீரை எடுப்பதில்லை என்றும் நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். இப்படி இருந்தால்தான் கடனைச் சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற புத்தி வரும் என எனக்கு அறிவுறுத்தியவள் என் மனைவிதான். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் வங்கிக் கடனை அடைத்து விடுவேன். அதன்பிறகு உங்களைப்போல் நானும் ஆனந்தமாக இந்தக் கிணற்று நீரைப் பருகத் தொடங்குவேன். அப்போது வீட்டிலிருந்து தண்ணீர் கட்டிக் கொண்டுவரும் பாடு இருக்காது!`
இதைக் கேட்டு நண்பரும் நண்பர் குடும்பத்தினரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.
_(கோடிகோடியாய் வங்கிப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கு ஓடுபவர்கள் இருக்கும் இதே நாட்டில்தான், இதே கால கட்டத்தில்தான் இத்தகைய நேர்மையான விவசாயிகளும் இருக்கிறார்கள்)_
*நிகழ்வு 3:*
இரு சக்கர வாகனத்தில் வழக்கமான பாதையில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த நண்பருக்கு தன் மனைவி பூ வாங்கிவரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது.
சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார்.
இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்தப் பெண்மணிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.
இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை.
நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!` என்றார் நண்பர்.
தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!`
பூ விற்று பிழைக்கும் எளிய மூதாட்டியின் எண்ணப் போக்கு நண்பரை திகைப்பில் ஆழ்த்தியது.
_(வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்ச லட்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிப் போய்விடும் மனிதர்கள் நிறைந்த இதே உலகில்தான், சாலை ஓரமாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வாழ்க்கைத் தரத்தில் அமைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இந்த மூதாட்டி பூ விற்றுக் கொண்டிருக்கிறார்)_
_(இவரைப் போன்றவர்களால் அல்லவா உலகில் நல்ல குணங்களின் நறுமணம் கமகமவென வீசிக் கொண்டிருக்கிறது!)_
*நிகழ்வு 4:*
நண்பர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கினார் இன்னொருவர். இரண்டு மாதங்களில் கடனைத் திருப்பித் தந்துவிடுவதாகச் சொன்னார். எல்லாம் பேச்சுவார்த்தை தானே தவிர எழுத்து பூர்வமாக எதுவும் எழுதிக் கொள்ளப் படவில்லை.
கடன் வாங்கிய நண்பர் திடீரென இதய அதிர்ச்சி ஏற்பட்டுக் காலமாகி விட்டார். கடன் கொடுத்தவர், தான் கடனாகக் கொடுத்த தொகையைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.
அது போனால் போகிறது. ஆனால் அந்த நண்பர் காலமாகிவிட்டாரே! இந்தச் சூழலில் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கிறதோ எனப் பதறியவாறு அவர்கள் இல்லத்திற்குச் சென்றார்.
இறந்தவரின் மனைவி அவரைத் தனியே அழைத்துப் பேசினாள்:
நீங்கள் சரியான சமயத்தில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து என் கணவருக்கு உதவியதை என் கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் சொன்னார். சடலத்தை எடுப்பதற்கு முன் ஐயாயிரம் ரூபாயை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நான் கடனாளியாக இறக்கக் கூடாது என்று கூறிவிட்டுக் காலமானார். அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும். அதனால் மறுக்காமல் இந்த ஐயாயிரம் ரூபாயை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!`
அந்த சகோதரி ஐயாயிரம் ரூபாய் கொண்ட கவரை நண்பரிடம் கொடுத்தபோது நண்பர் விழிகளிலிருந்து வழியத் தொடங்கிய கண்ணீர் நிற்க நெடுநேரமாகியது.
*அந்த ஆட்டோ ஓட்டுநர் போல, அந்த விவசாயி போல, அந்தப் பூக்கார மூதாட்டி போல, அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் போல இன்னும் நம்மிடையே சிற்சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.*
*நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலகம் சொர்க்கமாகும். வானகம் இங்கு தென்படும்.*
*இனிய வணக்கம்*
*அன்புடன்*
*டாக்டர் ஆ முகிலன்*!* நன்றி
0 Comments
Thanks for reading