சாம்பியன்ஸ் லீக் காலிறுதியின் முதல் சுற்றுப் போட்டியில் லிவர்பூல் அணியை 3-1 என வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது ரியல் மாட்ரிட். சரிசமமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மோசமான செயல்பாட்டால் பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது நடப்பு பிரீமியர் லீக் சாம்பியன் லிவர்பூல்.
2018 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூலை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது ரியல் மாட்ரிட். ஆனால், அதன்பிறகு இரண்டு அணிகளின் பயணமும் வெவ்வேறு திசைகளில் இருந்தது. அசைக்க முடியாத மாபெரும் அணியாக லிவர்பூல் உருவாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியபின் தடுமாறத் தொடங்கியது மாட்ரிட். ஆனால், இந்த சீசன் என்னவோ இரண்டு அணிகளுக்கும் ஒரேபோல்தான் இருந்தது. கடந்த சீசன் தங்கள் லீகில் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணிகள், இந்த சீசன் சொதப்பத் தொடங்கின. வீரர்களின் காயங்கள் அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் மீண்டும் இந்த ஆண்டு மோதப்போகின்றன என்று தெரிந்ததில் இருந்தே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, 2018 தோல்விக்குப் பழிதீர்க்கும் வாய்ப்பாகவே இதை லிவர்பூல் ரசிகர்கள் பார்த்தனர். அந்த அணியின் முன்னணி டிஃபெண்டர்கள் அனைவரும் காயம் அடைந்திருப்பதைப் போலவே, மாட்ரிட்டுக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. கேப்டன் ரமோஸ், கர்வஹால் காயம் காரணமாக ஆடமுடியாத நிலை ஏற்பட்டது. ஸ்டார் டிஃபெண்டர் வரேனும் கொரோனாவால் வெளியேறினார். இப்படி அவர்களும் 3 முக்கிய டிஃபெண்டர்கள் இல்லாமல்தான் களம் கண்டனர். அதனால், போட்டி சரிசமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிவர்பூல்..!
2 சென்டர் டிஃபெண்டர்களும் அணிக்குப் புதிதாக இருக்கும்போது, அனுபவம் வாய்ந்த ஃபுல் பேக் இருவரும் அவர்களுக்குப் பக்க பலமாக இருந்திருக்கவேண்டும். ஆனால், லிவர்பூல் அணியில் அதுதான் தலைகீழாக நடந்தது. அட்டாக் செய்யவே விரும்பும் அலெக்சாண்டர் ஆர்னால்ட், ராபர்ட்சன் இருவரும் தங்களுக்குப் பின்னால் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தினர். அந்த இடங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து லிவர்பூல் பாக்ஸை முற்றுகையிட்டனர் மாட்ரிட் விங்கர்கள். அதிலும் குறிப்பாக அலெக்சாண்டர் ஆர்னால்ட், டிஃபென்ஸில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டே இருந்தார். வினிசியஸ் ஜூனியர், ஃபெர்லாண்ட் மெண்டி ஆகியோர் ஜஸ்ட் லைத் தட் ட்ரிப்பிள் செய்து அவரைக் கடந்தனர்.
பொதுவாக லிவர்பூல் ஃபுல்பேக் இருவரும் அட்டாக்கில் கவனம் செலுத்தும்போது, அந்த அணியின் நடுகள வீரர்கள் அந்த இடத்தை கவர் செய்வார்கள். ஆனால், நேற்று வைனால்டம், நெபி கீடா இருவரும் அந்த விஷயத்தில் சொதப்பினார்கள். அதுமட்டுமல்லாமல், நடுகளத்தில் ஓரளவு தாக்கம் ஏற்படுத்தவும் தவறினார்கள். பந்தை வேகமாக முன்னெடுத்துச்செல்லாமல் மிட் தேர்டிலேயே வைத்திருந்தது மாட்ரிட் அதைக் கைப்பற்ற உதவியது. இவர்களின் மோசமான ஆட்டம், மாட்ரிட் நடுகள வீரர்கள் போட்டியை தங்கள் வசம் எடுத்துக்கொள்ள உதவியது.
ஃபுல் பேக், நடுகளம் என இரண்டு ஏரியாவும் சொதப்ப, ரியல் மாட்ரிட்டின் நடுகளம், அதன் விங்கர்களோடு சிறப்பாக இணைந்தது. டோனி குரூஸுக்கு நல்ல டைமிங் கிடைக்க, நிறைய ‘diagonal’ பால்களை அவர் அட்டாகிங் தேர்டுக்கு அணுப்பிக்கொண்டே இருந்தார். விங்கர்களின் மூவ்மென்ட்களுக்கு ஏற்றவாறு பாஸ்களை செலுத்திக்கொண்டே இருந்தார். அதன் விளைவாக 26-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது ரியல் மாட்ரிட். குரூஸ் கொடுத்த லாங் பாலை, அழகாக மார்பில் வாங்கி கட்டுக்குள் கொண்டுவந்தார், லிவர்பூல் டிஃபெண்டர்களைத் தாண்டி ஓடிய வினிசியஸ் ஜூனியர். அட்டகாசமான முதல் டச்சுக்குப் பிறகு, அதே வேகத்தில் முன்னேறி ஆலிசனைத் தாண்டி கோலாக்கினார். 1-0.
36-வது நிமிடத்தில் மீண்டும் அதேபோல் ஒரு பாலை அனுப்பினார் குரூஸ். முந்தைய பால் நடுவே போடப்பட்டதெனில், இம்முறை இடது விங்கை நோக்கி. அதை டிஃபெண்ட் செய்யப் பாய்ந்த அலெக்சாண்டர் ஆர்னால்ட், கோல்கீப்பருக்கு ஹெடிங் செய்ய நினைத்து மிகமோசமான ஒரு பாஸைக் கொடுத்தார். வலுவில்லாத அந்த ஹெடர், முன்னேறிக்கொண்டிருந்த அசான்சியோ வசம் சிக்கியது. தன் அற்புதமான ஸ்கில்லின் மூலம் ஆலிசனை ஏமாற்றி இரண்டாவது கோலை அடித்தார் அந்த் ஸ்பெய்ன் விங்கர்.
முதல் பாதி முழுக்க லிவர்பூலின் நிலை இதுதான். அவர்களின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போக, தியாகோவை பெஞ்சில் அமர்த்திவிட்டு நபி கீடாவை களமிறக்கிய கிளாப்பின் முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளானது. கீடாவின் செயல்பாடுமே மிகவும் மோசமாக இருந்தது. அதனால், 42-வது நிமிடத்திலேயே அவரை வெளியே எடுத்துவிட்டு தியாகோவை இறக்கினார் கிளாப். ஒருவழியாக இரண்டாவது பாதியில் கொஞ்சம் வேகம் காட்டியது லிவர்பூல். நடுகளத்தில் அதிக நேரம் பந்தை வைத்திருக்காமல் அட்டாகிங் தேர்ட் நோக்கி முன்னேறிக்கொண்டே இருந்தார்கள். அதன் விளைவாக 51-வது நிமிடத்தில் கோலடித்தார் சலா 2-1.
இந்த கோல் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நிமிடங்கள் ஒரு மாற்றம் தெரிந்தது. அடுத்த கால் மணி நேரம் இரு அணிகளும் மாறி மாறி எதிரணியின் கோல் போஸ்டை முற்றுகையிட்டன. ஆனால், கடைசியில் கோல் அடித்தது என்னவோ மாட்ரிட்தான். இம்முறை வினிசியஸ் அடித்த ஷாட்டை, ஆலிசன் சரியாகத் தடுக்காமல் போக மீண்டும் 2 கோல் முன்னிலை பெற்றது ஜிடேனின் அணி.
லிவர்பூல் அதன்பிறகு தங்கள் வேகத்தைக் கூட்டியது. பல அட்டாக்குகளை முன்னெடுத்தது. ஆனால், மாட்ரிட் நடுகளமும் டிஃபென்ஸும் சிறப்பாகச் செயல்பட்டு அதை முறியடித்தன. குறிப்பாக மோட்ரிட், குரூஸ், கஸமிரோ அடங்கிய அவர்களின் நடுகளம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது.
சலா அடித்த அந்த ஒரு அவே கோல் லிவர்பூல் அணிக்கான ஆறுதல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 4-1 என பார்சிலோனாவிடம் தோற்றுவிட்டு, தங்கள் மைதானத்தில் ஒரு அட்டகாசமான கம்பேக் கொடுத்தனர். அப்படியொரு கம்பேக்கை இந்த முறையும் அவர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அணியின் சமீபத்திய செயல்பாடுகள் அந்த நம்பிக்கையைக் கொடுப்பதாக இல்லை. நேற்று கொடுத்த பர்ஃபாமன்ஸைத் தொடர்ந்தால், மாட்ரிட் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்னொரு காலிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 2-1 என பொருஷியா டார்ட்மண்ட் அணியை வீழ்த்தியது. கெவின் டி புருய்னா, ஜேடன் சான்சோ இருவரும் சிட்டிக்காக கோலடித்தனர். டார்ட்மண்ட் கேப்டன் மார்கோ ரியூஸ் ஒரு அவே கோல் அடித்து அணிக்கு சற்று நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறார். இன்று நள்ளிரவு பேயர்ன் மூனிச் vs பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், போர்டோ vs செல்சீ போட்டிகள் நடைபெறுகின்றன.
from விகடன் https://ift.tt/3mqm9aA
via IFTTT
0 Comments
Thanks for reading