பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.
பந்து வீச்சாளர்களின் மிரட்டலான பங்களிப்பால் களமிறங்கிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ். பேட்டிங் முன்வரிசையில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவின் ஃபார்ம் ஆறுதல் அளித்தாலும், மற்றொரு தொடக்க வீரர் டி காக் மோசமான ஃபார்மில் உள்ளது அணிக்கு பின்னடைவே. ஃபார்மில் இருந்த லின்னிற்கு மாற்றாக டி காக் களமிறக்கப்பட்டது சற்று விமர்சனங்களுக்கு வித்திட்டது. சூர்ய குமார் யாதவின் ஃபார்ம் முன் வரிசைக்கு பக்கபலம். இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடிகளை வெளிப்படுத்த திணறுவது மும்பை அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.
மத்திய வரிசையில் பெரும் நம்பிக்கையாக பார்க்கப்படும் ஹர்த்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணல் பாண்ட்யா மூவரும் நம்பிக்கையளிக்கும் விதமான ஆட்டங்களை வெளிப்படுத்த தொடர்ந்து திணறி வருகின்றனர். இது அணிக்கு பேட்டிங்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஃபீல்டிங்கில் ஹர்திக்கும், பந்து வீச்சில் பொல்லார்டும் ஆறுதல் அளித்து வருகின்றனர்.
பேட்டிங்கில் கடும் சிக்கல்களைச் சந்தித்து வரும் மும்பை அணிக்கு போராட்ட குணத்துடன் வலு சேர்த்து வருகிறது அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் படை. பும்ராவும், போல்ட்டும் யார்கர்களால் எதிரணியினரை திணறடிக்க, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ் ஆகியோர் எதிரணியின் ரன் வேகத்தை தங்கள் சுழல் சூத்திரங்களின் மூலம் குறைத்து விக்கெட்டுகளையும் சரிக்கின்றனர். முந்தைய போட்டியில் 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கிய மும்பை, பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் கூல்டர் நெய்ல் அல்லது ஜேம்ஸ் நீஷமை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nl6Ss3
via IFTTT
0 Comments
Thanks for reading