ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன் ஜோஷ் ஃபிலிப்பே தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக ஃபின் ஆலன் என்கிற அதிகம் அறியப்படாத நியூசிலாந்து வீரரை ஒப்பந்தம் செய்திருந்தது பெங்களூரு. அந்த அணி ஒப்பந்தம் செய்தபோது uncapped வீரராக இருந்தவர், இப்போது சர்வதேச டி-20 அரங்கில் அரைசதமே அடித்துவிட்டார். யார் இந்த ஃபின் ஆலன், ஆர்சிபி அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது?
நியூசிலாந்தைச் சேர்ந்த 21 வயதே ஆன இளம் வீரர்தான் ஃபின் ஆலன். ஆக்லாந்தில் பிறந்து வளர்ந்தவரான ஆலன், உள்ளூர் போட்டிகளில் ஜொலித்ததன் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றார். 2015 மற்றும் 2017 என 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் ஆடியிருக்கிறார். அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சிறப்பாக ஒரு சதம் அடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல், ஒரு சில அரைசதங்களையும் அடித்து அசத்தியிருப்பார். Finn Allen
தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆக்லாந்து அணிக்காக ஆடிக்கொண்டிருந்த ஆலனுக்கு, 2020-ல் வெல்லிங்டன் அணிக்கு ஆடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இதன்பிறகுதான் ஃபின் ஆலன் பெரிய அளவில் கவனம்பெறத் தொடங்கினார். கடைசியாக நடந்து முடிந்த சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடரில் அதிக ரன்களை அடித்தவர்களின் பட்டியலில் ஃபின் ஆலன் முதலிடம் பிடித்தார். அந்தத் தொடரில் 11 போட்டிகளில் ஆறு அரைசதங்களுடன் 512 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 193.93. இந்தத் தொடருக்குப் பிறகுதான் ஆலன் பெங்களூரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். நியூசிலாந்து அணி உட்பட அங்கே பல உள்ளூர் அணிகளுக்குமே பயிற்சியாளராக செயல்பட்டிருக்கிறார். ஜோஷ் ஃபிலிப்பே வெளியேறியவுடன், மைக் ஹெசன்தான் ஃபின் ஆலனைப் பரிந்துரைத்திருக்கிறார். கடந்த அண்டு நடந்த ஏலத்தில் தன் அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டார் ஃபிலிப்பே. மாற்று வீரரை அந்தத் தொகைக்கே ஒப்பந்தம் செய்ய முடியும் என்பதால், 50 லட்சத்தில் இருந்த இவரை டிக் செய்திருக்கிறது அந்த அணி.
Also Read: IPL 2021: சிஎஸ்கே டு சன் ரைஸர்ஸ்... விமர்சனங்களுக்குப் பதில் சொல்வாரா கேதார் ஜாதவ்?!
அந்த அணிக்கு ஒப்பந்தமான சில நாள்களில், நியூசிலாந்து அணியிலும் ஆலனுக்கு இடம் கிடைத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஆலன் ஆடியிருந்தார். மூன்றாவது டி20 போட்டியில் கப்திலுடன் ஓப்பனிங் இறங்கிய ஆலன் வெளுத்தெடுத்துவிட்டார். 18 பந்துகளில் அரைசதம் கடந்தவர் 29 பந்துகளில் 71 ரன்களை அடித்து மிரட்டியிருக்கிறார்.
பெங்களூர் அணி ஃபின்ச்சை விடுவித்துவிட்டதால், இந்த சீசனில் ஃபிலிப்பேவும், தேவ்தத் படிக்கலுமே ஓப்பனிங் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிலிப்பேவும் சொந்தக் காரணங்களுக்காக இந்த சீசனில் ஆடவில்லை என அறிவிக்க தேவ்தத் படிக்கலுடன் யார் ஓப்பனிங் இறங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இங்கிலாந்து சீரிஸுக்குப் பிறகு, கோலியே ஓப்பனிங் இறங்கப்போவதாக அறிவித்து பிரச்னையை தீர்த்தார். ஆனால், தேவ்தத் - கோலியே தொடர் முழுக்க ஓப்பனிங் இறங்குவார்களா என்பது சந்தேகம். அதனால், இந்த இடத்தில்தான் ஃபின் ஆலன் முக்கியத்துவம் பெறுகிறார்.Finn Allen
வெல்லிங்டன் அணிக்காகவும் நியூசிலாந்துக்காகவும் ஓப்பனிங் இறங்கி அதிரடியாக ஆடி, தன்னை நிரூபித்திருப்பதால் கோலியுடன் ஓப்பனிங் இறங்கும் வாய்ப்பு சில போட்டிகளில் ஆலனுக்குக் கிடைக்கலாம்.
விஜய் ஹசாரே தொடரில் 700 க்கும் அதிகமான ரன்களை அடித்து படிக்கல் அசத்தியிருந்தார். பிக்பேஷ் லீகில் 500+ ரன்களை அடித்து ஃபிலிப்பே மிரட்டியிருந்தார். இந்த இருவரும் இல்லாதபோது இவர்களின் இடத்தை ஆலன் அதே தரத்தோடு சிறப்பாக ஆடியாக வேண்டும். ஆலனுமே நியூசிலாந்தில் சிறப்பாக ஆடிவிட்டு வருவதால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவிடுவார் என்றே கருதப்படுகிறது. 190+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார் என்பதால் இன்னொரு முனையில் கோலியும் ஸ்கோர்போர்ட் அழுத்தமின்றி கொஞ்சம் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடலாம்.
தேவ்தத் படிக்கல் கொரோனாவிலிருந்து குணமாகி வந்தாலும், நம்பர் 3 பொசிஷனில் ஆலனுக்கு இடம் கிடைக்கலாம். பெரும்பாலும் நியூசிலாந்தில் மட்டுமே ஆடிவிட்டு, முழுமையாக ஒரு தொடரை இந்திய மைதானங்களில் ஸ்பின்னர்களை பிரதானமாக எதிர்த்து ஆடுவது ஆலனுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆலன் இந்த சவாலை சமாளித்துவிடும்பட்சத்தில் இந்த சீசனின் சென்சேஷனாகக் கூட மாறும் வாய்ப்பிருக்கிறது.
http://dlvr.it/Rx7GcH
0 Comments
Thanks for reading