ரெய்னா அதிரடியால் சென்னை 188 ரன் குவிப்பு:
ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் போட்டியை டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது.
வழக்கம் போல் சரிவான தொடக்கம்:
கடந்த சீசனில் பெரும்பாலன போட்டிகளில் சிஎஸ்கேவின் தொடக்க வீரர்கள் சொதப்பலாக விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். விரைவில் இரண்டு மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்துவிடும். பின்னால் வரும் வீரர்கள் போராடி ரன்களை சேர்ப்பார்கள். அப்படித்தான் இந்தப் போட்டியிலும், சென்னை அணி 7 ரன்களுக்குள் டு பிளசிஸ், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது.
திரும்பி வந்துட்டனு சொல்லி - ரெய்னாவில் அதிரடி அரைசதம்
தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மொயின் அலி - ரெய்னா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. மொயின் அலி இரண்டு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியை கையில் எடுத்தர் சுரேஷ் ரெய்னா. சிக்ஸர்களாக பறக்கவிட்டார். பழைய ரெய்னாவின் ஆட்டத்தை இன்று பார்க்க முடிந்தது. அதிரடியாக அரைசதம் கண்ட அவர் நிச்சயம் சதத்தை நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக அவர் ரன் அவுட் ஆனார். 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் ரெய்னா. அவரை தொடர்ந்து அம்பத்தி ராயுடு 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
தோனி டக் அவுட்
தோனி களத்திற்கு வந்தாலே ஒருவித எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும். வழக்கமாக தொடக்கத்தில் நிதானமாக விளையாடி இறுதியில் அதிரடி காட்டுவதுதான் தோனியின் பாணி. சில பந்துகளில் தடுப்பாட்டம் ஆடிவிட்டு பின்னர் தூக்கி அடிக்க ஆரம்பிப்பார். ஆனால், இந்தப் போட்டியில் இரண்டாவது பந்திலே அடித்து ஆட முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்து டக் அவுட் ஆனார் தோனி. அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால், ஜடேஜா பவுண்டரிகளாக அடித்து நம்பிக்கை தந்தார்.
'அண்ணன் பந்துவீச தம்பி சிக்ஸர் விளாச'.. Sam Curran vs Tom Curran
தோனி ஆட்டமிழந்த பிறகு களத்திற்கு வந்தார் சிஎஸ்கேவின் கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன். இரண்டாவது பந்திலே பவுண்டரி விளாசி தனது ரன் கணக்கை துவக்கினார். அண்ணான் டாம் வீசிய 19வது ஓவரை எதிர்க் கொண்டார் தம்பி சாம் கர்ரன். அந்த ஓவரில் முதல் பந்திலே பவுண்டரி அடித்த சாம் கர்ரன், 3, 4 ஆவது பந்தில் சிக்ஸர் விளாசினார். இதனை பார்த்த போது அண்ணன் பந்துவீச தம்பி சிக்ஸர் விளாச என்பது போல் இருந்தது. 5 ஆவது பந்திலும் ஒரு பவுண்டரி விளாசினார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 15 பந்துகளில் இரண்டு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார் சாம் கர்ரன். ஜடேஜா 26(17) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். டெல்லி அணியில் வோக்ஸ், அவிஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடியாக ரன் குவிக்கும் டெல்லி அணி:
189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் அதிரடியாக ரன் எடுத்தனர். 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. பிரித்வி ஷா 36(18), தவான் 29(18) ரன்கள் எடுத்தனர். 27 பந்துகளிலேயே பிரித்வி அரைசதம் விளாசினார். அதேபோல், 10.2 ஓவர்களில் அந்த அணி 102 ரன்களை எட்டிய போது தவான் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dP5Pwd
via IFTTT
0 Comments
Thanks for reading